Dec 17, 2011

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர்வெட்டு திருவிழா கோலாகலம்

உடன்குடி :  தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர்வெட்டு
நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதை காண தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தேரிக்குடியிருப்பை ஒட்டியுள்ள குதிரைமொழி கிராம வனப்பகுதியில் மிகவும் தொன்னெடுங்காலம் முதல் கற்குவேல் அய்யனார் திருத்தலம் எழிலுடன் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைச் சுற்றிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க செம்மண் தேரிக்குன்றுகள் அரண் போலவும், கோட்டைச் சுவர் போலவும் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் கற்குவா என்ற மரத்தில் அய்யன் தோன்றி அற்புதங்கள் நிகழ்த்தி காட்டியதால் கற்குவா+அய்யன் கற்குவா அய்யன் என்றழைக்கப்பட்டார். இச்சொல் காலப்போக்கில் கற்குவேலய்யன் என்றழைக்கப்பட்டார். இச்சொல் காலப்போக்கில் கற்குவேலய்யன் எனப் பலவாறாக மருவிற்று. இங்கு அய்யன் பூரணம், பொற்கலை ஆகிய இரு தேவியருடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். அநீதிகள் தலைதூக்கிய போது அதனை அழித்து நீதியை நிலை நிறுத்தினார் அய்யர். அந்த நாளே கள்ளர்வெட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. இச்சிறப்பு மிக்க திருவிழா கடந்த நவ.17ம் தேதி சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் துவங்கியது.



தினசரி சிறப்பு பூஜையும், இரவு வில்லிசையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் (டிச.14ம் தேதி) பகல் 11 மணிக்கு ஜவராஜா மாலையம்மன் பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையும் நடந்தது. (டிச.15ம் தேதி) காலை 10 மணிக்கு மகளிர் வண்ணக்கோலமிடும் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு மற்றும் 12மணி சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையும், இரவு 7.30 மணிக்கு 25வது ஆண்டு வெள்ளி விழா திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு உற்சவர் திருவீதி உலாவும் சிறப்பு நிகழ்ச்சியாகவும், மாலை 6 மணிக்கு சமயசொற்பொழிவும், இரவு 8 மணிக்கு பட்டிமன்றமும் நடந்தது.

(டிச.16ம் தேதி) காலை 9 மணிக்கு தாமிரபரணி தீர்த்தம் வெள்ளிக்குடத்தில் எடுத்துவருதல், காலை 9.45 மணிக்கு கோயில் எல்லையில் இருந்து அய்யன், பேச்சியம்மாளுக்கு முளைப்பாரி ஊர்வலமும், பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 4.45 மணிக்கு பிரசித்திப் பெற்ற கள்ளர்வெட்டு நிகழ்ச்சியும் நடந்தது.

கள்ளர் எனக் கூறும் இளநீரை தேரி  மணல்குன்றின் மீது வைத்து கோயில் பூசாரி வெட்டு நிகழ்ச்சி நடந்தது. இந்த இடத்தில் மணல் எடுத்து வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் வைத்தால் செல்வம் பெருகும் என்ற ஐதீகம் இருப்பதால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் கோவை, சென்னை போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

 சிறப்பு நிகழ்ச்சிகளாக பகல் 9 மணி, மாலை 2 மணி, மாலை 5
மணிக்கும் சமயசொற்பொழிவும், பகல் 10 மணிக்கு வில்லிசையும், இரவு 8 மணிக்கு திரைப்படஇசை கச்சேரியும் நடந்தது. இன்று முன்னடி பூஜையும், வரும் டிச.23ம் தேதி எட்டாம் நாள் பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார்
ராமசுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் செய்து
வருகின்றனர்.

- தினமலர் செய்திகள்

No comments:

Post a Comment