Nov 17, 2017

கருக்குவேல் ஐயனார் விகடன் செய்திகள்

முற்காலத்தில், தேரிக் குடியிருப்பையும், அதைச் சுற்றியிருந்த பகுதிகளை யும் அதிவீரணசூர பாண்டிய மன்னர் ஆட்சி செய்து வந்தார். ஐயனார் மானிட உருவம் எடுத்து, மன்னருக்கு ஆலோசனை கூறும் அமைச்சராக இருந்தார். 

மன்னரின் கோட்டைக்கு அருகில் இருந்த சுனையில் (ஊற்றில்) இருந்து சுரக்கும் தண்ணீரைத்தான் குடிநீராகப் பருகி வந்துள்ளனர். இந்த ஊற்றுப் பகுதியில் ஓங்கி வளர்ந்த ஒரு மாமரம் இருந்தது. அந்த மரத்தில் குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு காய் மட்டுமே காய்த்துப் பழமாகுமாம். சுனையில் தானாக விழும் அந்த மாம்பழத்தைச் சாப்பிடுபவருக்கு அபூர்வ பலன்கள் கிடைக்கும் என்பதால், அந்தப் பழத்தைக் காவல் காக்க, மாமரத்தைச் சுற்றிலும் காவலாளிகளை நிறுத்திவைத்திருந்தார் மன்னர். 


அந்த ஊரில், ஆண்கள் கண்களில்படாமல் ஒரு விதவைப் பெண் தனியாக வசித்து வந்தாள். பொழுது சாயும் நேரத்தில் மட்டும் சுனைக்கு வந்து தண்ணீர் பிடித்துச் செல்வது வழக்கம். அப்படி வழக்கம்போல் தண்ணீர் பிடிக்க வந்தபோது, மரத்தில் இருந்த பழம் உதிர்ந்து, அந்தப் பெண்ணின் குடத்தில் விழுந்துவிட்டது.  இது தெரியாத அந்தப் பெண், வீட்டுக்குச் சென்று குடத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டாள்.


அடுத்த நாள் காலையில் மரத்திலிருந்த பழத்தைக் காணாததால், மன்னரின் உத்தரவுப்படி விதவைப் பெண்ணின் வீட்டைத் தவிர மற்ற எல்லா வீடுகளிலும் காவலாளிகள் சோதனை போட்டும் பழம் கிடைத்த பாடில்லை. இறுதியாக விதவைப் பெண்ணின் வீட்டில் சோதனை போடும்போது குடத்துக்குள் கிடந்த மாங்கனியை எடுத்து மன்னரிடம் கொடுத்தனர் காவலாளிகள். அந்தப் பெண்தான் மாம்பழத்தை எடுத்துச் சென்றுவிட்டாள் என்று நினைத்த மன்னர், அவளை முறைப்படி விசாரிக்காமல், அந்தப் பெண்ணுக்கு மொட்டையடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, எருக்கம்பூ மாலை போட்டு, சுண்ணாம்புக்  காளவாயில் போட்டு எரிக்கும்படி உத்தரவிட்டார்.


அமைச்சராக இருந்த ஐயனார், ‘`அந்தப் பெண்மீது தவறில்லை. தனக்கே தெரியாமல் குடத்துக்குள் மாங்கனி விழுந்ததற்கு இவள் எப்படிப் பொறுப்பாவாள்? மன்னா, இந்த உத்தரவைத் திரும்ப பெற வேண்டும்’’ என்று மன்னரிடம் கூறியும் அதைக் கேட்காத மன்னர்,  தண்டனையை நிறைவேற்றினார். ஆராயாமல் தனக்கு அநீதி இழைத்த மன்னரின் செயலால் கோபம்கொண்ட அந்தப் பெண், ‘`நின்று நிலைத்து நீதி கேட்காதவன் சீமையில் தீக்காற்றும் தீ மழையும் பெய்யக்கடவது...’’  என்று சாபமிட்டாள்.  உத்தமியின் சாபம் அல்லவா? உடனே மன்னரின் கோட்டையும் ஊரும் தீக்கு இரையாகிவிட்டது. ஐயனார் மட்டும் தன் தெய்வ சக்தியினால், அருகிலிருந்த கருக்குவா மரத்தில் ஐக்கியமாகி விட்டார். பிற்காலத்தில் மக்களுக்கு அருள்புரிய திருவுள்ளம்கொண்டு, கருக்குவா மரத்திலிருந்து தோன்றினார். கருக்குவா மரத்திலிருந்து தோன்றிய தால், ‘கற்குவேல் கையனார்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. 

முற்காலத்தில் ஐயனாருக்கு, ‘கையனார்’ என்றே பெயர். கற்குவேல் கையனார் என்ற பெயரே காலப்போக்கில் மருவி, கருக்கு வேலய்யன், கருக்கோல ஐயன், கருக்குவாள் ஐயன், கருக்குவாலை ஐயன் என்றெல்லாம் அழைக்கப் பட்டு, தற்போது, ‘கருக்குவேல் ஐயனார்’ என்று அழைக்கப்படுவதாக விரிகிறது ஐயனார் கோயில் தல வரலாறு. இப்பகுதி கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் ‘கருக்கு வேலைய்யன்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.


ஐயனாரின் அழகுத் திருக்கோலம்!
ஐயனார் எழுந்தருளியுள்ள கருவறை கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடக்கியபடி கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். ஐயனாரின் வலது கையில் நீதி நெறியை அறிவிக்கும் தருமச்செண்டு உள்ளது.  ஐயனாருக்கு வலப்புறம் பூரணம்மாள், இடப்புறம் பொற்கமலம்மாள் ஆகியோர் காட்சியளிக் கின்றனர். பொற்கமலம்மாளை ‘புஷ்கலையம்மாள்’ எனவும் அழைக்கின்றனர். கருணை ததும்பும் இரு விழிகளும் தரிசிப்பவர்களைக் கவரும் வண்ணம் திகழ்கின்றன. கூரிய நீண்ட மூக்கும், இருபுறமும் மடிந்த காதுகளும், இதழ்களில் நெளியும் புன்னகையும், ஜடாமுடியும் கொண்டு எழிலார்ந்த கோலத்தில் அருள்காட்சி தருகிறார் ஐயனார்.


கள்ளர் வெட்டுத் திருவிழா!
முற்காலத்தில் வடதிசையிலிருந்து, மந்திர சக்தி படைத்த கள்வன் ஒருவன், கற்குவேல் ஐயனார் கோயிலில் உள்ள பொருள்களைக் களவாடிச் செல்வதற்காக வந்தான். அவன் தன் மந்திர சக்தியைப் பயன்படுத்திப் பொருள்களைக் கொள்ளையடித்த நிலையில், அவனை முன்னடியானும் பட்டவராயனும் பிடித்து, ஐயனாருக்கு முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தினர். ஐயனார், அந்தக் கள்வனைச் சிரச்சேதம் செய்யுமாறு உத்தரவிட்டாராம். அதன்படி முன்னடியான், பலவேசக்காரன், வன்னியராஜா ஆகியோர் கள்வனைக் கட்டி இழுத்துக்கொண்டு சென்று, தேரிக் காட்டில் வைத்துச் சிரச்சேதம் செய்துவிட்டனர். இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் ‘கள்ளர் வெட்டுத் திருவிழா’ விசேஷமாக நடைபெறுகிறத



கார்த்திகை மாதம் முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் பக்தர்கள் சுத்த விரதம் இருப்பார்கள். கோயிலில் தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலையும் மாலையும் வில்லிசையில் ஐயனாரின் கதை படிக்கப்படும். மாதத்தின் கடைசி மூன்று நாள்களில்தான் திருவிழா சிறப்பாக நடைபெறும். கார்த்திகை மாதம் 28-ம் நாள் ஐவரராஜாவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. 29-ம் நாள் ஐயனார், பேச்சியம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.


எடுப்பெடுத்தல்!
30-ம் நாளில்தான் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான கள்ளர் வெட்டுத் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலையில் கோயில் பூசாரிகள் 11 பேர், திருக்கோளூருக்குச் சென்று தாமிரபரணி நதியிலிருந்து 11 கலசங்களில் தீர்த்தம் எடுத்து வருவார்கள். பெண்கள் பேச்சியம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வருவார்கள். தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெறும். மதியம் 3 மணிக்கு கள்ளர்சாமி ஆடும் கோமரத்தாடி (சாமி ஆடும் நபர்), கள்ளர்சாமி சந்நிதிக்கு முன்பு செல்வார். அவருக்குக் கருங்கச்சை, சல்லடை, குல்லா அணிவித்து அவருடைய கையில் ஐந்து மணி வல்லயம் கொடுத்து, மேளம் கொட்டப்பட்டு அருள் ஏற்றப்படும். அருள்வந்த கள்ளர்சாமி, கையில் ஒரு பெரிய ஓலைப் பெட்டியை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடி, கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பழம், வெற்றிலை, தின்பண்டங்கள், பலகாரங்கள், விளையாட்டுச் சாமான்கள், பூஜைப் பொருள்கள் என்று கண்ணில் பட்ட பொருள்களையெல்லாம் களவாடிக் கொண்டு அருளோடு ஓடி வருவார். இப்படி கடைகளில் பொருள் எடுப்பதை ‘எடுப்பெடுத்தல்’ என்கின்றனர். ஓலைப் பெட்டியில் எடுத்து வந்த பொருள்களில் ஒரு பகுதியைப் பாடல் படிக்கும் வில்லிசைப் பாடகருக்கும், மற்றொரு பகுதியை மேளக்கார அன்னாவிக்கும் கொடுப்பார். 


பிறகு மேல்புறமும் அடிப்புறமும் தோல் சீவப்பட்ட செவ்விளநீர்க் காய்க்கு முழுவதும் குங்குமம் பூசி, அதை  ஒரு தாம்பாளத்தில் வைத்து ஐயனார் சந்நிதிக்குக் கொண்டுசெல்வார்கள். அங்கே பூஜை செய்யப்பட்டு, மேளதாளத்துடன் தேரிக் காட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது செவ்விளநீர். கூடவே, கள்ளர்சாமி ஆடும் நபரைக் கள்வனாகக் கருதி அவரின் கைகளைக் கயிற்றால் கட்டித் தேரிக் காட்டுக்கு இழுத்துச் செல்கிறார்கள். கள்ளர்சாமியைச் சுற்றிலும் முன்னடிமாடன், வன்னிய ராஜன், பட்டவராயன், பலவேசக்காரன், சங்கிலிமாடன், உதிரமாடன், கருப்பன், பெரியாண்டவர் ஆகிய சாமிகளைச் சுமந்தபடி, சல்லடையும் குல்லாவும் அணிந்த சாமியாடும் சாமிமார்கள் வருவார்கள்.
மண்ணெடுத்தல்!
தேரிக் காட்டை அடைந்ததும், அங்கே குவிக்கப்பட்ட மணல்மேட்டில் செவ்விளநீர் வைக்கப்படுகிறது. கள்ளர்சாமியின் கையைக் கட்டிய கயிற்றின் முனையை வன்னியராஜாவுக் காகச் சாமியாடுபவர் பிடித்துக்கொண்டு, அந்த மணல்மேட்டில் வைக்கப்பட்டிருக்கும் செவ்விள நீரை அரிவாளால் வெட்டுவார். பின்னர், கள்ளர்சாமிக்குத் தண்ணீர் தெளிக்கப்பட்டு உயிர் கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து கோயிலுக்கு வந்து பக்தர்கள் பொங்கல் வைத்து, மறுநாள் காலையில் கிடா வெட்டி, சமைத்துச் சாப்பிட்டு விட்டுக் கிளம்புவார்கள்.


தேரிக் காட்டில் செவ்விளநீர் வெட்டப் பட்டதும், இளநீரிலுள்ள தண்ணீர்பட்ட செம்மண்ணைப் பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளி எடுக்கின்றனர். இதனை ‘மண்ணெடுத்தல்’ என்கின்றனர்.  இந்த மண், பார்ப்பதற்கு ரத்தம் சிந்தியது போல இருக்கும். இந்த மண்ணை வீடுகளில், கடைகளில், வியாபார நிறுவனங்களில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த மண்ணை நெற்றியில் பூசிவருவதோடு, தண்ணீரில் கலந்து காய்ச்சல், வயிற்றுவலி தீர்க்கும் நிவாரணியாக வும் குடித்து வருகின்றனர். 


இதோ... கார்த்திகை மாதம் பிறக்கப்போகிறது. திருவிழாவை எதிர்நோக்கியிருக்கிறது ஐயனாரின் திருக்கோயில். அன்பர்கள்... குறிப்பாக ஐயப்பமார்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு ஐயனாரைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள். அவரின் திருவருளால் உங்கள் எதிர்காலம் சிறக்கும் வாழ்க்கை செழிக்கும்.

இலாட சந்நியாசி
அதிவீரணசூர பாண்டிய மன்னருக்கு அமைச்சராக இருந்து ஆலோசனை கூறிய ஐயனாருக்கும் ஆலோசனை சொல்வதற்காக ஓர் அமைச்சர் இருந்தார். அவர்தான் இலாட சந்நியாசி. ஐயனார் சந்நிதிக்கு முன்புள்ள மகா மண்டபத்தில், ஐயனாருக்கு வலப்புறத்தில் அருளும் விநாயகப் பெருமானுக்கு அருகிலேயே ‘இலாட சந்நியாசி’ அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். ஐயனாருக்கு ஆலோசனை கூறும் அமைச்சர் அந்தஸ்தில் உள்ள இவர், முனிவரின் வடிவம்கொண்டு முனீஸ்வரராகத் திகழ்கிறார்.

ஐயனாருக்கு உகந்த நாள்
புதன் மற்றும் சனிக்கிழமைகளும் மாதம்தோறும் உத்திர நட்சத்திர நாளும் ஐயனாருக்கு உகந்த நாள்கள் ஆகும். இந்த நாள்களில்  ஐயனாருக்கு வெள்ளைநிறப் பட்டும், ரோஜா மாலையும், தேவியருக்குச் சிவப்புநிறப் பட்டும், மல்லிகைப் பூமாலையும் சாத்தி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கல்லினால் செய்யப்பட்ட யானை, குதிரை சிலைகளை நேர்த்திக் கடனாகச் செலுத்துகின்றனர்.

குதிரை வாகனம் 
இங்குள்ள ஐயனாருக்கு யானையுடன் குதிரையும் வாகனமாக உள்ளது. பொதுவாக ஐயனார் குதிரையின் மீது இருக்கும் கோலத்தில்தான் காட்சி தருவார். ஆனால், இங்கு குதிரை மட்டும் தனியாக இருக்கிறது. மக்களுக்கு நீதி கூற வேண்டும் என்பதற்காகத்தான் ஐயனார் குதிரையின் மேலிருந்து கீழே இறங்கி அமர்ந்துள்ளார் என்கின்றனர் ர்ப் பெரியவர்க

ஒரே சந்நிதியில் மூன்று அம்மன்கள்  
இங்கே, வடக்கு நோக்கி மூன்று அம்மன்கள் அருட்காட்சி தருகின்றனர். பொதுவாக அமர்ந்த நிலையில் காட்சி தரும் பேச்சியம்மன் இங்கே நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். பேச்சியம்மனுக்கு வலப்புறத்தில் உச்சினி மாகாளியும், இடப்புறத்தில் ராக்காயி அம்மனும் காட்சி தருகின்றனர்.

பங்குனி உத்திரம்
உத்திரத்தில் உதித்தவன் ஐயன்’ என்று ஐயனாரின் அவதாரம் பற்றிக் கூறுவதைப் போல் கார்த்திகை மாத கள்ளர் வெட்டு தவிர, பங்குனி உத்திரத்தன்றும் ஐய்யனார், பேச்சியம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன. கோயிலின் 

தல விருட்சம் வக்கணத்தி மரம் (தற்போது கோயிலில் இல்லை) என்று கூறுகிறார்கள

பிள்ளை வரம் தரும் பேச்சியம்மன் 
குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பேச்சியம்மனுக்கு மஞ்சள்நிறப் பட்டு, செவ்வரளி மாலை சாத்தி வழிபட்டு, வேப்பமரத்தில் தொட்டில் கட்டி, மரப்பாச்சி பொம்மை வாங்கிப்போட்டால் மரத்தில் தொட்டில் ஆடுவதுபோல அடுத்த வருடமே வீட்டிலும் தொட்டில் ஆடும் என்கின்றனர் பக்தர்கள்.

ப்படிச் செல்வது ?
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் – திருநெல்வேலி செல்லும் சாலையில் உள்ளது காயாமொழி. காயாமொழியிலிருந்து 8 கி.மீ தொலைவில் குதிரைமொழி – தேரிக் குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கிறது அருள்மிகு கற்குவேல் ஐயனார் திருக்கோயில். காயாமொழியிலிருந்து மினி பஸ் அல்லது ஆட்டோவில் செல்லலாம்.


நடைதிறப்பு நேரம்: காலை 8 மணி முதல்  மாலை 6 மணி வரை (மதியம் நடை அடைப்பு இல்லை) 


தொடர்புக்கு: திருக்கோயில் அலுவலகம்: 04639 – 232530
நன்றி: விகடன்