Dec 17, 2010

தினமலர் செய்தி - தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர்வெட்டு திருவிழா

உடன்குடி : தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் திருவிழாவில் நேற்று கள்ளர் வெட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் கள்ளர்வெட்டு திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். திருவிழா கடந்த மாதம் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் துவங்கியது.விழாவில் நேற்று காலை 9 மணிக்கு தாமிரபரணி தீர்த்தம் வெள்ளிக்குடத்தில் எடுத்துவருதல், காலை 9.45 மணிக்கு கற்குவேல் அய்யனார் வழிபாட்டு குழு சார்பில் கற்குவேல் அய்யனார், பேச்சியம்மனுக்கு முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும், பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பிரசித்தி பெற்ற கள்ளர் வெட்டு நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடந்தது. கள்ளர் என்னும் இளநீர் வெட்டும் இடத்தில் புனித மண் எடுத்து வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்ற ஐதீகம் இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் போட்டி போட்டு புனித மண் எடுத்துச்சென்றனர். இரவு 7 மணிக்கு திருக்குறள் கேள்வி பதில், இரவு 8 மணிக்கு திரைப்பட கச்சேரியும் நடந்தது. விழாவில் இன்று முன்னடி பூஜை நடக்கிறது. வரும் 23ம் தேதி பகல் 12 மணிக்கு எட்டாம் நாள் பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், அறங்காவலர் குழுத்தலைவர் ராஜேந்திரன், அறங்காவலர்கள் கோபாலகிருஷ்ணன், முருகேசமுத்து, பெத்தையா, ராஜரத்தினம் அம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.
- தினமலர்
கள்ளர் வெட்டு நிகழ்வு - 17-12-2010 8.00 am சன் டிவியில் ஒளிபரப்பானது.